அன்பு உறவுகள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்கிறேன்-ரமணி,சேர்வைகாரன்பட்டி-வடகாடு

Saturday, September 1, 2012

என் இளமைக் கால ஊஞ்சலிலே -Ever Green 80's

இந்த தலைப்புடன் ஏன் Ever Green 80's என்று அச்சிடப்படுகிறது என்று சில பேர் கேட்பது தெரிகிறது!

அதாவது 1980 காலப்பகுதியில் பிறந்த உறவுகளுக்கு மட்டுமே மூன்றுவிதமான நடைமுறைகளை உடைய மக்களை கண்கூடாக காண வாய்ப்பு கிடைத்திருக்கும்!அதற்க்கு பின் பிறந்தவர்களுக்கு அவ்வாய்ப்பு செவிமதியாகவே இருக்கும்.அந்த வகையில் பிறந்த நானும் 80's என்ற பெருமிதம் கொள்கிறேன்.அதென்ன பலவிதமான விசயங்கள் .....

1.முந்தைய காலம் (டயல் செய்யும் தொலைபேசி)
2.இடைப்பட்ட காலம்(மொபைல் போன் )
3.இன்றைய நவீன காலம் (ஸ்மார்ட் போன்)

*தற்போது மக்களை மிகப்பெரிய அளவில் ஒன்றிணைக்கும் தொலைபேசி உரையாடல்....

இந்த விசயத்தினை என்னுடைய பார்வையில் விவரிக்கிறேன்...

எங்க ஊருக்குள்ளே இரண்டு தொலைபேசிகல்தான்இருந்தது...அதில் டிரிங் ...ட்ரிங் என்று பெல் அடித்து அழைப்புகள் வரும்...அதில் ஒன்றைமட்டும் நான் தூரத்தில் இருந்து பார்த்துள்ளேன்.வடகாடு கூட்டுறவு வங்கியில் அந்த தொலைபேசி இருக்கும்.காக்கி கலர் கொண்ட அந்த போன் பார்பதற்க்கே நான் சுசைட்டிக்கு(கூட்டுறவு வங்கி)அரிசி,மண்ணெண்ணெய் வாங்க போன சாக்கில் வெளியில் நின்று பார்த்து ரசிப்பதுண்டு...அதுவும் நான் பார்க்கும் போது அழைப்பு வந்தால் படு குசி..அந்த மேலாளர்(தெற்குபட்டி துரைராசு) வந்து அதன் ரிசீவரை எடுத்து ஹலோ என்று சொல்லி என்னென்னமோ பேசுவாக.நான் வெளியில் நின்று கொண்டு அதை பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைவேன்...மறுநாள் எங்க ஊருக்குள்ளே இருக்கிற எல்லா நண்பர்களிடனும் நான் போன் வந்ததை பார்த்தேன்,நல்லா சத்த வெளியிலே வரை கேட்டுச்சு என்று சொல்லுவேன் அதில் ஒரு சந்தோசம்.
vadakadu co-op society
அடுத்த விஷயம் அதன் போன் நம்பர் ..இதை எங்கள் நண்பர்கள் வட்டாரத்துக்கும் கேட்டு தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொஞ்சம் அதிகம்தாம்..அந்த நம்பர் 25320 ஆனால் அந்த அலுவலகத்தில் 20 என்றுதான் சொல்லக்கேள்வி?.என் வட்டாரம் சேர்வைகாரன்பட்டி மேலக்குடியிருக்கு நண்பர்கள்...முத்துநாதன்(குட்டையன்),குமார்(ஊமை குமார்)மோகன்(மறுத்துட்டேன்),பாஸ்கர்(கோட்டையன்),தொழ முத்து,வரதராசு(குருது),அடைக்கலம்(கருணை),தெற்குவீட்டு குமார்(கூல்பானை) இவ்ளோதாம்பா...என்னோட பட்டப்பேரு விடாது கருப்பு இதுபோல ஒவ்வொருவருக்கும் அவர்களது பிரத்தியேக விசயங்களை வைத்து பேர்சூட்டுவது அதனால் ஏற்படும் சிறு சிறு கட்டிபுடி சண்டைகளும் நிறைந்த நண்பர்கள் வட்டாரம்...இதில் எனக்கும் கோட்டையன்-க்கும் அடிக்கடி சண்டைவரும்...ஏன்னா நாங்க ஒரு குடும்பத்து பசங்க..மற்றபடி இதில் மூன்று பேர் இப்போது இவ்வுலகத்தில் இல்லை...அதில் குறிப்பிடப்படவேண்டிய மிக நெருங்கிய நண்பன் தொழ முத்து .....மிகவும் சுறுசுறுப்பானவன் எனக்கும் அவனுக்கும் பலவிதமான குட்டி குட்டி போட்டிகள் வச்சு அதை விளைடாண்டுகொண்டே பள்ளிக்கூடத்துக்கு போவதும்...பின்னர் கொல்லைக்குபோவது எங்களின் அன்றாட விசயங்கள்.அதில் சொல்லக்கூடிய விளையாட்டுகள்...

பள்ளிப்படிப்பின் பசுமையான நினைவுகள்...

ஏதோவது ஒரு கல் அல்லது பனங் கோட்டை அதை ஒவ்வொருவராக உதைச்சு உதச்சு எவ்வளவு தூரத்துக்கு உதைக்கிறோம் என்று பார்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்துக்கு செல்வோம்.இப்போ மாதிரி பஸ் லாரிகள் அவ்வளவாக அப்போ இருக்காது எனவே ரொம்ப ப்ரீயா விளையாண்டுகொண்டே போவோம்.சுமார் 2 கி.மீ தூரம் பள்ளிக்கூடத்துக்கு இப்படி போவது எங்களுக்கு ரொம்பவே புடிச்ச விளையாட்டு.அப்புறம் போகும் வழியிலே ஒட்டப்பட்டிருக்கும் சினிமா பட போஸ்டர்கள்...குறிப்பாக ஆலங்குடி தியாகராஜா,மேல ராசியமங்கலம் மேகலா தியேட்டர்,கைகாட்டி ஸ்டார்,நெடுவாசம் மாரிமுத்து,கீரமங்கலம் VRK,கடைசியா வடகாடு தங்கம் திரையரங்கம் இதுபோன்ற தியேட்டர்கள் அந்த காலக் கட்டத்தில் இருந்தன..இதிலே கைகாட்டி ஸ்டார் தியேட்டரில் ஓடுவதாக ஒட்டப்பட்டிருந்த "புது நெல்லு புது நாத்து " ஒரு வருஷம் தீபாவளிக்கு வெளியாகி இருந்தது அந்த படத்தை பற்றி ஒரு வாரம் பூரா பேசிக்கிட்டு இருந்தோம்.காரணம் அதிலே வரும் சில பாடல்கள்..
கருத்த மச்சான் கஞ்சத்தனை எடுத்து வச்சான்....என ஆரம்பிக்கும் பாடல் மற்றும் பூ ..பூ... பூ ..பூப்பூத்த சோலை...எங்களுக்கு மிகவும் பிடிச்ச பாடல்கள். ..எங்காவது கல்யாண வீட்டில் இந்த பாடல் பாடினா சத்தம் போடாமே கேட்போம்ம்..அதிலும் ரொம்ப தூரத்திலே இருந்து அந்த பாடல் பாடுனே...சிலவரிகள் கேட்காமல் இழுத்து இழுத்து கேட்கும் ... ரொம்ப சங்கட்டமா இருக்கும்.அந்தே நேரத்திலே சினிமாவில் பின்புறத்தில் யார் யார் இருக்கின்றனர் எனபது எங்களுக்கு தெரியாது குறிப்பா இளையராஜா.ரஜினியோட தளபதி படம் வந்த நேரத்தில்தான் அப்படி ஒரு கதையே தெரியவந்துச்சு அதுவும் தினத்தந்தியிலே விபரமா போட்டிருந்தாக..
அந்த காலப்பகுதியில் பழைய பேப்பரிலே வரும் சினிமா படங்களை நறுக்கி அதை பாடப்புத்தகத்தில் உள்பக்க அட்டையில் சோத்துப் பருக்கை கொண்டு ஒட்டிவைத்துக்கொள்ளும் பழக்கமும் இருந்தது...நான் என்னோட கணக்கு நோட்டிலே ராசாதி ராசா வெள்ளைபடம் ஒட்டியிருந்தேன்...அதை பார்த்துவிட்ட நம்ம பெரிய பள்ளிக்கூட வாத்தியார் செமத்திய ஒருநாள் வச்சாரு...அதிலேர்ந்து உள்பக்க அட்டையிலே ஓட்டுவது இல்லை பதிலுக்கு அட்டைக்கு உள்ளே வச்சு நண்பர்கள் வரும் நேரம் மட்டும் அட்டையை பிரிச்சு படத்தை காட்டுவது ஒரு பழக்கம்...அப்புறம் வீட்டு கதவு மரம் என எங்கும் இந்த படங்கள்தான்...குறிப்பா ரஜினியோட எந்த படம் வந்தாலும் அதை பழைய பேப்பர் கிடைச்சா அந்த படங்களை நறுக்கு வச்சி பார்க்கிறது ரொம்ப சந்தோசமா இருக்கும்.அதில் சில படங்கள் தளபதி,முத்து,வீரா,அண்ணாமலை,பணக்காரன்,ராஜா சின்ன ரோஜா,மூன்று முகம்,முரட்டுகளை இதுபோன்ற படங்களின் தினத்தந்தி வெளியீடுகள் ஒரு கோப்பே நான் வச்சிருந்தேன்.அதுவும் ஒவ்வொரு வருஷம் அடுத்த வகுப்புக்கு போகும்போது அந்த படங்களை அப்படியே மறு புத்தத்திற்கு மாற்றி கொண்டு போவது ஒரு சந்தோசம்.அந்த நேரத்தில் வெள்ளை சட்டை மற்றும் ஊதா கால்சட்டைதான் யூனிபார்ம் சிலநேரம் அரசு காக்கி கால்சட்டை மற்றும் வெள்ளை மேல்சட்டை கொடுப்பார்கள்.அதிலே கால்சட்டை பெரிய பெரிய சேப்புகள்(பாக்கெட்) இருப்பது எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் ஏன்னா...புயியங்கோட்டையை வறுத்து அதுக்குள்ளே போட்டுக்கிட்டு எங்கே போனாலும் தின்னுக்கிட்டே போவோம்.சில நேரம் பிலாக்கொட்டை கைவசம் இருக்கும்.அதிலேயும் சிலநேரம் எவனுக்காவது அந்த அளவு குறைஞ்சு போச்சுன்னா அடுத்தவனிடம் கேட்பது அதனால் மல்லுப்புடி சண்டை வருவது சுவாரஷ்யமான கதை.அதில் அடிக்கடி உடையார் என்ற அடைக்கலம் என்பவன் எல்லோரிடத்திலும் கேட்டு அடி வாங்குவான்(கைப்புள்ள மாதிரி).பள்ளிப்படிப்பில் வடகாடு பகுதியில் யாருமே செய்யாத சில சுவாரஷ்யமான விசயங்களை எங்கள் பகுதி நண்பர்கள் செய்து அதன்மூலம் நல்லா செமத்தியா வாங்கி கட்டிக்கொண்டோம்...வீட்டிலும் பள்ளிக்கூடத்திலும் அதிகமா வாங்கி கட்டிக்கொண்ட கூட்டம் எங்க பசங்க கூட்டம்தான்..ஏன்னா பெருமையா சொல்லணும் அஹா....ஹா...

மறக்க முடியாத நினைவுகள்...

1991ஆண்டு காலப்பகுதியில் பல மாணவர்கள் எங்கள் பகுதியில் இருந்து மற்றும் கீழாத்தூர் பகுதியில் இருந்து எங்களுடன் ஐக்கியமாகிய மாணவர்களும் ஒன்றாக சேர்ந்து பள்ளிக்கூடத்துக்கு போவது வழக்கம்.சுமார் 40 லிருந்து 60 பேர் கொண்ட கும்பல் சிறு சிறு குழுக்களாக வீட்டில் இருந்து கிளம்புவோம்.சரியா 9.50மணிக்கு பள்ளத்துவிடுதி பகுதிக்கு சென்றடைவோம்.அதாவது பெரிய பள்ளிக்கூடத்தின் பெல் அடிக்கும் சத்தம் கேட்கும் தூரத்தில் சென்றடைந்து அங்கேயே குட்டி மீட்டிங் போடுவோம்.அந்த மீட்டிங்கின் தலைவர்கள் யாரென்றால் 9வது படிக்கும் மாணவர்கள்.(இப்போ பேரு சொல்ல முடியாது என்னா அவங்க எல்லாம் பெரியாலகிடாங்க)அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி அந்த மீட்டிங் பாய்ண்டை வந்தடைந்து இருப்போம்.அங்கே சொல்லப்படும் வழிகாட்டுதல்கள்?...
இந்தாங்கடா ஆறாவது வந்திருக்கிற பயலுகளா ...கரெட்டா சாப்பாட்டு பெல் அடிச்ச உடனே நேரா போயி வரிசையிலே நின்னு சோறு வாங்கிட்டு இங்கேயே வந்திருங்க ...பை மூட்டை எதுவும் அங்கே கொண்டு போகாதீங்க..
கிளாசுக்கு போநீங்கனா வாத்தி அடிக்கிற அடியிலே டவுசர் கிழிஞ்சிடும்!
ஒரு அரை விட்டா நாலு நாளைக்கு வாய் கோணிக்கும்
காதை புடிச்சு திருகுவாணுக ...அது பல மாசத்துக்கு வலிக்கும் ..
இதுபோல பல வழிகாட்டுதல்கள்...
இப்படி அனுபவசாலிகள் சொல்ல ...நாங்க ஒரு டீம் தனியா நாம போயிதான் பார்ப்போமே என்று கிளாசுக்கு போக..அங்கே முத முத பீரிடு வந்தாரு மன்னாரு...துளசி...கேட்டாரு கேள்வி...லீவ் லெட்டர் எழுத சொல்லி தனித்தனியா உக்கார வச்சு எழுதிய தாளோட ஒவ்வொருவரா எழுந்து போகணும்..எங்க பேப்பரை வாங்கி பார்த்துட்டு ரெண்டு கையையும் இறுக்கி புடிச்சுகிட்டு நல்லா ஆரெஸ் பதி பச்சைக் குச்சியாலே டவுசர்லே அடிச்ச அடியிலே டவுசர்லே இருந்த தூசி எல்லாம் பஞ்சா பறந்திடுச்சு!ஏன்னா மூணு லைன்தான் எழுதி இருந்தோம்..heading,from to.எப்பூடி நம்ம லெட்டர்! இதை எழுத 1/2 மணி நேரமாடா ன்னு செம மாத்து மாத்திட்டாரு.அன்னைக்கு ஓடிவந்த நாங்க பல நாலா பள்ளிக்கூடம் கருப்ப செகப்பான்னு கூட தெரியாது.


இப்படியே பலமாதங்கள் நாட்கள் நகர்ந்தன..இந்த கால கட்டத்தில் பல அறிய விசயங்கள் எங்கள் மத்தில் அறிமுகப்படுத்தியவன் கீழாத்தூர் சேகர்.என்னவென்றால் பள்ளிக்கூடம் போகாமல் சாப்பாட்டு நேரம் மட்டும் நாங்க போயி சோறு வாங்கும் விபரத்தினை சில எட்டப்பன்கள் வாத்தியார்களிடம் சொல்ல அதன் பேரில் எங்களை வரிசையில் சோறுவாங்க நிக்கும்போது கையும் களவுமாக பிடித்து கொடுத்துவிட்டனர் எங்க கிளாஸ் லீடர் ...அதற்க்கு சற்றும் ஓயாமல் ..இந்தா சாப்பிட்டுவிட்டு மதியம் கண்டிப்பா கிளாசுக்கு வர்றோம் என்று சொல்லி அன்னைக்கு வாங்கியதே கடைசி சோறு...அப்புறம் அதுபோல தில்லாலங்கடி வேலை செய்ய முடிலை நம்ம எட்டப்பன் சக மாணவர்களில் சூழ்சியால்.என்ன பண்றது மதியம் சோறு இல்லை பசி வேற..என்னா பண்ணலாம் என்று கூட்டத்தில் ஆலோசித்த பின் ஒரு முடிவுக்கு வந்தோம் ...பள்ளத்துவிடுது வயங்காட்டு பகுதியில் நண்டு புடிச்சு சுட்டு திங்கலாம்,மீன் புடிச்சு சுட்டு திங்கலாம்,காச்சில் கன்னி வச்சு புடிக்கலாம்,கடைசியா யார் வீட்டு தூட்டத்திலே என்ன போட்டிருக்காகளோ அதை புடுங்கி திங்கலாம் என ஒவ்வொரு சிறு சிறு குழுக்களும் தங்களுடைய ஐடியா டிப்போவை தொறந்து யோசனைகளை கொட்டினர்.பின்னர் அந்தந்த குழுக்களும் தன்னோட திறமைகளின் வழிகளில் பசியைப்போக்க வழிவகை செய்தோம்.அப்போது எங்களைப்போலவே வடக்குப்பட்டி VO மாணவர்கள் மீன்புடி தொழிலில் ஏற்கனவே ஈடுபட்டிருந்தனர்.அவர்களுக்கும் எங்களுக்கும் மீன்புடிப்பதில் சண்டை மூலவே ..பின்னர் ஒரு தரப்பு கல்லை கொல்லையில் கௌதாரி மூட்டை இருப்பதாக ரெண்டு மூட்டை எடுத்து கொண்டுவந்தது.அதை பார்த்த மத்த டீம் கல்லைகொல்லையை அலசி ஆராய்ந்து நாஸ்தி பண்ணிவிட்டது.மறுநாள் கொல்லைக்காரன் கடுப்பாகி எல்லோரையும் அந்த பகுதியில் இருந்து விரட்டி அடித்தனர்.இதில் நாங்க கொஞ்சம் ஓவராத்தான் போவோம் அதாம்பா என்ன விலையுதோ அதை ஒருத்தன் ஒன்னு புடுங்கியாந்தா மற்றவன் அந்த கொல்லையே அளிச்சுடுவாணுக.அதுவே அந்த பகுதியில் நாங்க டேற போடுவதற்கு தடையாகிவிட்டது.சோளக்கொல்லை முதல் கல்லை,கம்பு,கேழ்வரகு,பயித்தங்காய்,வெள்ளரி,வெண்டிக்காய் போன்ற பச்சையாக திங்கும் காய்கறிகள் அந்த பகுதியில் மிகுதியாக பயிரிடப்படும் சில இடங்களில் வாழை.நாங்க எதையும் விட்டு வைக்கிறதில்லை என்ன கிடைச்சாலும் தின்னு வைப்போம்.மழைகாலம் எங்களுக்கு ரொம்ப கைகொடுக்கும் ஏன்னா நண்டு மீன் ஈசியா கிடைக்கும் மற்ற சீசன்களில் ரொம்ப கஷ்டமா இருக்கும்.அதை நிவர்திசெய்தவன் கள்ள துப்பாக்கி சேகர்.
சரி இனி கொஞ்சம் நகந்து கொப்பங்குலத்தில் குடிகொள்ள ஒரு குழு முடிவெடுத்தது.எங்களை அனுமதிக்கவில்லை காரணம் இவனுக வந்தா சும்மா சும்மா கட்டிபுடி சண்டை போட்டுக்கிட்டு சத்தம் போடுவானுக அப்புறம் எல்லோருக்கும் தெரிஞ்சிடும் அதனாலே வராதிங்கடா..என சொல்லி அந்த நாள் முதல் பிரிஞ்சு போயிட்டானுக.ஆனா அங்கே இன்னொரு கூட்டம் பரமன் பட்டி டீம் இவனுகளை அடிச்சு விரட்டிருச்சு.மீண்டும் எங்க இடத்துக்கே வந்து சேர்ந்தனர்.அப்போது சேகரின் நவீன துப்பாக்கி பரபரப்பாக எல்லோரிடத்திலும் பேசப்பட்டது காரணம்...சேகர் என்பவன் ரொம்ப கோவக்காரன் அவனின் செயல்கள் ரோமக சீரியசாகவே இருக்கும் பள்ளிக்கூடத்துக்கு வரும்போதே ஏதாவது பூ அல்லது புலி என வித்து காசு பார்க்கும் நோக்கத்தோடுதான் வருவான்...அவன் அறிமுகம் செய்த துப்பாக்கி ஒரு குடைக் கம்பியின் சிறிய அளவிலான கம்பி அதனை ஒரு பக்கம் மடித்து சப்பையாக மூடப்பட்டிருக்கும் ...அந்த அமூடப்பட்ட இடத்தில் இருந்து 3 அல்லது 5cm மறுபக்க தூரத்தில் ஒரு ஓட்டை இருக்கும் இதை ஒரு அதிமுக கை வண்ணத்தில் செய்யப்பட்ட கட்டையில் இறுக்கி கட்டி இருப்பான் ...பார்பதற்கு நிச துப்பாக்கி போலவே இருக்கும்...அதனை செயல்படுத்துவதில்/இயக்குவதில் அவனே மன்னன்.
கொஞ்சம் தென்னை நாறு அல்லது அணில் கூட்டின் சிறு சிறு நாறுகள்,ஒரு இரும்புக் குண்டு,ஒரு முழு தீப்பெட்டி இதுவே அவனின் தோட்டா வுக்கான ராம் மெட்டீரியல்.
முதலில் இந்த நாறு போன்ற அமைப்பை அந்த கம்பியில் உள்ளே வச்சு போக்சு கம்பியில் உதவியுடன் இடிப்பான்...பின்னர் இரும்பு குண்டு(பால்ரஸ்)அதன் மேலே வைத்து இடிப்பான்...இதனும் கொஞ்சம் கொஞ்சம் தீப்பெட்டியில் உள்ள மருந்தை மட்டும் தனியாக பிரிந்தது எடுத்து ஒரு பேப்பரில் வைத்துக்கொண்டு கலவையாக கலந்து கலந்து சேர்த்துக்கொண்டே வருவான்...கடைசியாக துப்பாக்கி ரெடி என்று சொல்லுபோது நாங்க பின்வாங்க ஆரம்பிப்போம்..ஏன்னா அவன் ஒரு சைகோ திடீர்ன்னு நம்மளை நோக்கி கூட சுடுவான் என்று அங்கே இருக்கும் ஒவ்வொருவனுக்கு மனசுக்குள் பயம்...இவ்வளவு இருந்து ஏன் அவனை இந்த கூட்டத்துடன் சேர்த்துள்ளோம் என்றால் இதுபோல புதிய புதிய விசயங்களை அறிமுகம் செய்வான்.
இவ்வாறு உருவான துப்பாக்கியைக்கொண்டு தெள்ளத்தெளிவாக பல பறவைகளை சுட்டு விடுவான்..

ஒருநாள் நல்ல புறா ஒரு நாங்க இருந்த நெடுங்குளம் ஆலமரத்தின் வாதில்(கிளை) வந்து உட்கார்ந்தது.அப்போது துப்பாக்கியும் தயாரானது உடனே இதை சுடவா என்று கேட்க...நாங்க சொன்னோம் ஆமா ...ஓவரா புளுகாதே அந்த புறா ஊட்டும் என்று சும்மாதான் சொன்னோம்...உடனே துப்பாக்கியை எடுத்தான்...நல்ல குறிவைத்தான்...அந்த நேரம் அந்த பக்கி புறா எங்களையே உத்து உத்து பார்த்தது...கொஞ்ச நேரத்தில் திட்டீர்ந்னு படு சத்தத்தில் சேகரின் துப்பாக்கி வெடித்தது அடுத்த கணம்...அந்த புறா தரையில் விழுந்தது...சரியா கழுத்து பகுதியில் குண்டு பாய்ந்திருந்தது ...கீழே விழுந்த புறா துடித்த துடைப்பார்த்த நாங்க ரொம்பவும் கவலைப்பட்டோம்.. ரத்தம் சிறிது சிந்தியது...
சரி செத்துச்சு என்று நினைக்கும் கொஞ்ச நேரத்தில் ...அதை ஒரு கம்பியில் குத்தி சுட்டுக்கொண்டிருந்தான்...இருந்தாலும் எங்களுக்கு ரொம்பவே வருத்தமா இருந்துச்சு..
வேற எதையாவது கொன்னுருக்கலாம்...இந்த புறாவை போட்டு தள்ளிட்டான்...அதை அவன் ...மிளகாய் பொடி உப்பு எல்லாம் வச்சு தின்னான்...யாரும் அதில் பங்கு கேட்கவும் இல்லை அவன் தரவும் இல்லை...
இன்னொருநாள் நல்ல 1கிலோ வரும் ஒரு காச்சில் அதை சுட்டு தள்ளினான்..அதை எல்லோருக்கும் கொடுத்தான்...அவனால் சுடமுடியாத ஒன்று என்வென்றால் அணில் ..அதை காட்டா பூட்டை(உன்டிகோல்) கொண்டு எளிதாக அடிப்பான்..ஆனால் அவனது துப்பாக்கி சிறு சிறு பறவைகளை மட்டுமே கொள்ளும்.

இந்த துப்பாக்கியை நாங்க சுட்டு பலக கேட்டால் தரமாட்டான் இதனால் எங்களுக்குள் பிரிவினை வலுத்தது ஆகவே நாங்களும் துப்பாக்கி செய்வோம் என்று காலாண்டு லீவில்(எங்களுக்குத்தான் பல நாளா லீவாச்சே)தனியாக துப்பாக்கி செய்தோம் அதனை வடிவமைக்கும் பணி கருனை என்ற அடைக்கலம் செய்தான் நானும் கூடவே இருந்தேன் ஒருநாள் சனிக்கிழமை 2மணி வடக்குப்பட்டியில் கல்யாண சாப்பாடு முடித்துவிட்டு நேரா துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சேர்வைகாரன்பட்டி மாங்கொல்லை அருகில் இருக்கும் மாமரத்திக்கு போனோம் ஏன்னா அங்கதான் எந்த நேரமும் குருவி,பலவிதமான பறவைகள் இருக்கும்....

செண்பகம்

அப்படி சென்ற அன்றுதான் இந்த நண்பர்கள் வட்டாரம் கதிகலங்கியது...காரணம் மதியம் நாங்க போனவுடன் ஒரு செண்பகம் வந்து உட்கார்ந்தது வரதராசு துப்பாக்கியை புடிச்சான்...நான் தீப்பெட்டியை எடுத்து கொடுத்தேன்...கோட்டையன் வேடிக்கை பார்த்தான்...கருணை பத்த வச்சான் ...சுறு சுறுன்னு தீப்பட்டி மருந்து பத்திக்கொண்டது...நாங்க செண்பகத்தை பார்த்தோம் ...அது சவுடால எங்களையே உத்து பார்த்துக்கொண்டிருந்து ....திட்டீர்ந்னு துப்பாக்கி பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறியது ...எங்க மேலே எல்லாம் ஒரே ரத்தம் என்னடான்னு பார்த்தா செண்பகம் சாகலை அது ..விட்டா போதும்டா சாமி...இனிமே இந்த மரத்தடிக்கே வர்ப்பிடதுன்னு ஓடியே போச்சு...அப்புறம் எப்படி இவ்ளோ ரத்தம் என்று திரும்பி பார்த்தா குருது கீழே ரத்த வெள்ளத்தில் கிடந்து துடிக்கிறான்...அய்யயோ இவன் செத்துட்டான் என்று ஆளுக்கொரு பக்கமா அலறி அடிச்சுக்கிட்டு ஓடிட்டோம்...(அதான தமிழன் பண்பாடு?!)..என்ன ஆச்சுன்னா கருணை வடிவமைச்ச துப்பாக்கியில் பின்புறத்தில் சிறு ஓட்டை இருந்துள்ளது மருந்தை போட்டு இடிச்சதிலே தோட்டாவானது பின்புறம் வழியாக வெடிச்சு சிதரிவிட்டது! துப்பாக்கியின் உள்ளே இருந்த பால்ரசு வதற்ராசின் கழுத்தில் உள்ள எலும்பில் பட்டு பெருங்காயத்தை ஏற்படுத்தியுள்ளது..நல்லவேளை இன்னும் கொஞ்சம் கீழேயோ அல்லது மேலேயோ பால்ரசு பட்டிருந்தால் அவ்ளோதான் அவன் கதை சுத்தம். கடைசியில் அவனை அவக மாமா தூக்கி கொண்டுபோய் சீனிவாசன் டாக்டரிடம் கட்டு கட்டி கொண்டாந்து வச்சிருந்தாக..ரெண்டு நாள் கழிச்சு நாங்க போனோம்..அவுக அய்யா செம்மைய புழுத்த கலாட்டா கலட்டுனாக...அன்னையோட நாங்க இந்த துப்பாக்கி தொழிற்சாலையை மூடிட்டோம்.ஏன்னா டேக்கினிகள் பிராப்ளம் வந்திருச்சு சரியான QC டீம் இல்லை..சோ நாங்க வேற ஒரு அத்தியாயத்துக்குள் நுழைந்தோம் ..
அது என்ன?

அப்போது மிகவும் பரபரப்பாக ONGCகாரங்க எல்லா இடத்திலேயும் போர் போட்டானுக அதையே நாள்முளுசும் சுத்தி சுத்தி பார்த்து திரிந்தோம்.கடைசியா அந்த டீம் எல்லாத்தையும் அள்ளிக்கட்டிக்கொண்டு போயிருச்சு...கடைசியா விட்டுட்டு போன சில வயர்கள் மற்றும் காலாவதியான பாட்டரிகள்...அதை நான் சேகரித்து வந்து அதை வச்சு ஏதாவது பண்ண முடியுமான்னு R&D விட்டுக்கொடிருந்தோம்.அதிலே உண்ணும் தேறலை...அந்த நேரத்தில் எங்க வட்டார நண்பர்கள் வீட்டில் யாரு வீட்டிலேயுமே கரண்ட் இல்லை இதனாலே எங்களுக்கு கரண்ட் இருக்கிற வீடுகளைப் பார்த்தல் ரொம்ப ஆச்சர்யமாக இருக்கும்.அவங்க வீட்லே ரேடியோ மற்றும் டேப் பாடினால் வேடிக்கையாக போய் பார்போம்.இப்படி காலம் சென்றுகொண்டிருந்த வேலை நீண்ட நாட்களாக வேலை செய்யயாமல் இருந்த எங்க சின்ன பள்ளிக்கூட தெருவிளக்கு எரியத்தொடங்கியது.மிக்க சந்தோசத்தில் நாங்க அனைவரும் அந்த தெருவிளக்கிற்கு மாலை 6மணிக்கு போவோம் நல்லா விளையாடுவோம் அதிகமாக பூப்பறிக்க வருகிறோம் வியையாட்டே பிரசித்தி பெற்றது.

சேர்வைகாரன்பட்டி பள்ளிக்கூடம் 2011



சேர்வைகாரன்பட்டி பள்ளிக்கூடம் 2010


இப்படி விளையாட்டும் பொழுதுபோக்கும் நிறைந்த எங்கள் வாழ்க்கைமுறை மீண்டும் பள்ளிக்கூடத்துக்கு போற நேரம் வந்துச்சு.காலாண்டு தேர்வு சம்பந்தமான பேச்சுகள் அடிபடத்தொடங்கியது அந்த நேரத்தில்தான் நாங்க மாட்டிக்கொண்டோம்...ஏன்னா நாங்க பள்ளிக்கூட பக்கம் போயிருந்தா தானே பரிட்சை எல்லாம் தெரியும்...ஒருநாள் நாங்க பள்ளிக்கு போகாம பழைய போலிசு நிலையத்துக்கு எதிரே உள்ள கருப்பு தோட்டத்தில் இருந்தோம்...மதியம் 2மணி ஒரு கூட்டமே வந்துச்சு எங்களை புடிச்சு பள்ளிக்கூடத்துக்கு கொண்டு போயி சேர்க்க அதில் இடப்பெற்றிருந்த தலைகள் எல்லாம் யாரைடா அடிப்போம்ன்னு இருக்கிற கூட்டம் ...அவங்க கையிலே சில பேரு மட்டினாணுக...நல்லா செமத்திய கரும்பு தோட்டத்துக்குள்ளேயே போட்டு மிதிச்சாணுக...ஒரு பத்து பதினைந்து பேரு அந்த கூட்டத்துக்கிட்டே மாட்டினுசு ...அன்னைக்குதான் கடைசி நாள் ஒளிஞ்சு இருக்கும் படை.கடுமையாக சிதறி ...பல பேரு ஊரைவிட்டே ஓடிட்டானுக..ஏன்னா அவ்ளோஅடி பள்ளிக்கூடத்திலே....சிலபேரு கடைகல்லே போயி வேலைக்கு சேர்ந்து இப்போ அந்தந்த தொழில்ல வளர்ந்திருக்காங்க.திரும்ப பள்ளிக்கூடத்துக்கு போன ஒரே ஆள் நான் மட்டுமே.1992 ஆண்டில் சேர்வைகாரன்பட்டியில் இருந்து பள்ளிக்கு திரும்பி தினமும் அன்றாட சென்று வந்ததன் வெளிப்பாடு இன்று என்னிடம் உள்ளது!

பாட்டு பைத்தியத்தில் மூழ்கிய காலம் 1990's

அந்த கால கட்டத்தில் மிகுந்த ஆர்வம் மற்றும் ஏக்கம் ஒன்று இருந்தது என்ன என்றால் பாடல் கேட்பது..அதுவும் கொழும்பு வானொலியின் வர்த்தக ஒளிபரப்பில் காலை 7மணி முதல் 10மணி வரையிலும்.மீண்டும் ௦மாலை 2.30 முதல் மாலை 5வரை வரையிலுமான ஒளிபரப்பும் உடன் என் மானசீக ஒலிபரப்பாளர் அப்துல் கமீது அவர்களின் தமிழ் பேச்சு.இதன் நடுவில் நம்ம சென்னை வானொலியில் காலை எட்டு மணிக்கு ஒளிபரப்பாகும் தென்கச்சி சுவாமிநாதனின் நாளும் ஒரு தகவல்(எடுத்துட்டு புட்டான்..வந்துருக்கான் என உச்சரிப்பது ரொம்ப நல்லா இருக்கும்)....திருச்சிராப்பள்ளி வானொலியின் மாலைநேர விஞ்ஞான வீராச்சாமியின் வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில் சொல்லப்படும் உரம் பூச்சி கொல்லி மருந்து முன்னேச்சரிக்கைகளும் கேட்கவே ரொம்ப ஆர்வமா இருக்கும்...அப்புறம் ஆனாதையாக வடகாடு பஞ்சாயத்து கட்டிடம் முன் செவனேன்னு இந்தியிலே ஏதாவது ஓடிக்கொண்டிருக்கும் சாலிடியர் வெள்ளை டிவி.இதுபோன்ற விசயங்கள் அந்த நேரத்தில் அன்றாட நடைபெறும் விசயங்கள்.கடைசியாக வடகாடு பஞ்சாயத்துக்குள் உட்பட்ட ரேடியோ நிலையங்களில் 1998வரை இயங்கிக்கொண்டிருந்த ஒரே ரேடியோ நிலையம் அது சுந்தன்பட்டி ரேடியோ தான்.

அந்த நேரத்தில் மிக கடுமையான அடிதடிகள் அரங்கேறிய காலம் 1991...ராஜீவ் காந்தி கொலையும் அதனால் கடுப்பாகிய மக்களும் போலிசை அடிச்சதும்,பல திமுக காரர்களின் கடைகளை சூறை ஆடியதும் அப்போ நடந்த கலவரங்கள்.அதன் விளைவால் பலரின் மீது துப்பாக்கிச்சூடும் நடந்தது அடுத்து அதில் ஈடுபட்ட சுமார் 56 பேரின்மீது வழக்கு பதிவும் செய்து சுமார் 20 வருடங்கள்(2011) கேசும் நடந்தது.

அதேவேளையில் எனக்கு பிடிந்த சில பாடல்களின் சாரம்....

என்னைக்கவர்ந்த வரிகள்....

மேடைக்கும் மாலைக்கும் ஆசைப்பட்டு....
வெட்டுக்கள்! குத்துக்கள்! ரத்தங்கள்! போவதென்ன!?...
இதை புரிஞ்சும்! உண்மை தெரிஞ்சும் ! இன்னும் மயக்கமா!?.

படம்:தர்மதுரை(1991) ,பாடல்:வாலி பாடல் லிங்க்
இசை : இசைஞானி இளையராஜா
----------------------------------------------------------------
வாலிபங்கள் ஓடும் வயதாக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதம்மா!
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதம்மா ......

சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே!

படம்:புதுப் புது அர்த்தங்கள்(1989) ,பாடல்:வாலி பாடல் லிங்க்
இசை : இசைஞானி இளையராஜா
----------------------------------------------------------------
வசந்த காலக் கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள்! கண்ணீர் சிந்தும் நினைவுகள்!!
நிலையில்லாத மனிதர்கள் அவர்க்குமென்ன உறவுகள்?

படம்:தியாகம்(1978) ,பாடல்:? பாடல் லிங்க்
இசை : இசைஞானி இளையராஜா
----------------------------------------------------------------
தரை மேல் பிறக்க வைத்தான் - எங்களைத்
தண்ணீரில் திளைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் - பெண்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான்!

படம்:படகோட்டி(1977) ,பாடல்:வாலி பாடல் லிங்க்
இசை : MSV
----------------------------------------------------------------
உணவும் அதன் ஆழமும் ....

இன்றைய காலத்தில் உணவில் எவ்வளவோ வெரைட்டி வந்திருக்கு...ஆனால் அந்த கால கட்டத்தில் இரண்டு அல்லது மூன்று முறையான உணவே காணப்பட்டது.என் வீட்டைப்பொருத்தவரையில் அதிகமாக நான் 12வகுப்பு படிக்கும் வரை சாப்பிட்டது சோளக்கூலுதான்.பள்ளிக்கு கிளம்பும்போது கூலின் ஆடையை நான் விரும்பி சாப்பிடுவேன் காரணம் அந்த வகையான கூலுதான் நான் திரும்பி வீடுவரும் வரை பசிதாங்கும்.ஏனெனில் என் கிளாசிலே என்னிடம் மட்டுமே சைக்கிள் இல்லை அதனால் நான் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு திரும்ப பள்ளிக்கூடத்துக்கு வர இயலாது.அம்மா அப்பா ரெண்டுபேருமே கூலிவேலை பார்பவர்கள் எனவே நான் நெல்லுக் கஞ்சி (அதாம்பா சோறு)சாப்பிடுவது செவ்வாய்க்கிழமை மட்டுமே ஏன்ன அன்னைக்குத்தான் எங்க அப்பா சம்பளம் வாங்குற நாள் மேலும் வடகாடு சந்தையும் கூட ஆக மீன் மற்றும் அரிசி அன்னைக்கு வாங்கி வருவார் கொஞ்சம் அவருக்கு சரக்கும் அடிச்சிட்டு வருவாக.செவ்வாய்க்கிழமை இரவு சோறு உடன் மீன் கொழம்பு மறுநாள் கூழு இப்படித்தான் அன்றைய காலத்தில் 95சதவிகித குடும்பங்கள் வாழ்ந்துவந்தன ...இதை நான் சொல்ல என்றுமே தயங்குவதில்லை காரணம் வாழ்க்கைப்பாதை எவ்வளவு கொடியது என்பது இன்றைய தலைமுறையினருக்கு புரியவேண்டும்.உழைப்பு என்றுமே வீண் போகாது என்பதற்கு எ-கா விளங்க வேண்டும் என நினைக்கிறேன்.இன்றும் இதே போல சூழ்நிலைகளில் குடும்பங்கள் உள்ளன ஆனால் அவர்களது தலைமுறையினர் தடம் மாறிச்செல்கின்றனர்.
இந்த வடகாடு கிராமத்தினை பொறுத்தவரையில் எனக்கு சில முக்கிய ஆதாரமான விசயங்கள் தெரியும் என்ற வகையில் சொல்கிறேன் ஒருசில குடும்பங்கள் தவிர மற்ற அனைவரும் பிழைப்புக்காக சாராயம் சம்பந்தமான தொழில்களில் ஈடுபட்டவர்கள்.இதில் மறுப்பு தெரிவிக்கும் அளவிற்று யாரும் இல்லை!வேறுவழியும் இல்லை அந்த நேரத்தில் காரணம் பிழைக்க விவசாயம் ஒன்றே தொழில் அதை செய்ய இயற்க்கை வழிவிடவில்லை அதனாலே அப்படி இருந்தனர்..இப்போது அதை இத்தலைமுறையினர் மாற்றுவழியில் பின்பற்றுகின்றனர் அது என்ன? குடிப்பழக்கம் மற்றும் போதைப்பழக்கம்,இதை மறுக்கும் சிலபேர் வாழ்க்கையின் விளிம்பில் உள்ளவர்களே!இது தமிழகத்தையே ஆட்டிப்படைக்கும் விஷயம் அதில் இந்த வடகாடு மட்டும் விதிவிலக்கா என்ன? அன்றைய சாராய எரிப்பு இப்போ அரசே எடுத்து நடத்துவதால் குடிமகன்களின் எண்ணிகையும் சீராக அதிகரித்து வருகிறது.

0 comments:

Post a Comment